search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குளங்கள் நிரம்புதல்"

    தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. மாவட்டம் முழுவதும் உள்ள 2040 குளங்களில் ஆயிரம் குளங்கள் நிரம்பும் தருவாயில் உள்ளது.
    நாகர்கோவில்:

    தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது.

    சிற்றாறு-1 அணைப்பகுதியில் நேற்று இரவு விடிய, விடிய மழை பெய்தது. அங்கு அதிகபட்சமாக 35.6 மி.மீ. மழை பதிவானது. நாகர்கோவில், பூதப்பாண்டி, சுருளோடு, கன்னிமார், கொட்டாரம், குலசேகரம், களியக்காவிளை, மார்த்தாண்டம் பகுதிகளில் சூறைக் காற்றுடன் மழை பெய்தது.

    நாகர்கோவிலில் இன்று காலை சூறை காற்று வீசியது. இதில் புத்தேரி பாலம் பகுதியில் ராட்சத மரம் ஒன்று முறிந்து ரோட்டில் விழுந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று மரத்தை வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

    இதேபோல் வடசேரி குன்னுவிளை பகுதியிலும் மரம் ஒன்று முறிந்து விழுந்தது. நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்தின் பின்புறம் நின்ற பழமைவாய்ந்த மரம் ஒன்றும் சூறைக்காற்றிற்கு முறிந்து விழுந்தது. தோவாளை பகுதியில் வீசிய சூறைக்காற்றிற்கு 10-க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்தது.

    தோவாளை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நின்ற மரம் முறிந்து விழுந்ததில் அந்த பகுதியில் நின்ற மின்கம்பமும் சேதம் அடைந்தது. மின் ஒயர்கள் அறுந்து வழுந்தன. இதனால் அந்த பகுதியில் மின்சாரம் தடைபட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் மின்வாரிய ஊழியர்கள் அங்கு விரைந்து சென்று மரத்தை வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

    அகஸ்தீஸ்வரம், முகிலன் குடியிருப்பு, ராஜாக்க மங்கலம், குளச்சல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் சூறைக்காற்றிக்கு மரங்கள் முறிந்து விழுந்தது.

    பூதப்பாண்டி, தடிக்காரன் கோணம், அருமநல்லூர், தேரூர், அஞ்சுகிராமம், பொற்றையடி பகுதிகளில் நூற்றுக்கணக்கான வாழை மரங்களும் முறிந்து விழுந்தது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

    தோவாளை அரசுப்பள்ளி வளாகத்தில் நின்ற மரம் சூறைக்காற்றிற்கு முறிந்து கிடக்கும் காட்சி.

    மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதியிலும் பெய்து வரும் மழையினால் அணைகளின் நீர்மட்டம் கிடு, கிடுவென உயர்ந்து வருகிறது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் நேற்று ஒரேநாளில் 1¾ அடி உயர்ந்து உள்ளது. 48 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர் மட்டம் இன்று காலை 14 அடியாக இருந்தது. அணைக்கு 1537 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. அணையில் இருந்து 53 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணை இன்று காலை 75.70 அடியாக இருந்தது. அணைக்கு 1359 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. அணையில் இருந்து 824 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணிநேரமும் அணையை கண்காணித்து வருகிறார்கள்.

    பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளில் இருந்து 977 கனஅடி தண்ணீர் திறந்துவிடுவதால் சானல்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் பாசன குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. மாவட்டம் முழுவதும் உள்ள 2040 குளங்களில் ஆயிரம் குளங்கள் நிரம்பும் தருவாயில் உள்ளது. குளங்கள் நிரம்பி வருவதால் விவசாயிகள் சாகுபடி பணியிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை-12.6, பெருஞ்சாணி-11.8, சிற்றாறு 1-35.6, சிற்றாறு 2-30, நாகர்கோவில்-3, பூதப்பாண்டி-3.2, சுருளோடு -10, கன்னிமார்-4.6, பால மோர்-29.2, கொட்டாரம்-5.4, அடையாமடை-5, கோழிப் போர்விளை-3, திற்பரப்பு-11.8, புத்தன் அணை-11.2.
    ×